திருவாபரண பாதையில் கூடுதல் வசதி கேரள தேவசம்போர்டு அமைச்சர் தகவல்
சபரிமலை: மகரவிளக்கு திருவாரண பாதையில் கூடுதல் வசதிகள் செய்யப்படும் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மண்டல - மகரவிளக்கு காலத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக பம்பையில் நேற்று அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனில் அனைத்து அரசு துறைகளும் செய்ய வேண்டிய பணிகளை தாமாகவே அறிந்து செய்ய வேண்டும். வரும் சீசனில் மிக அதிகமான பக்தர் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும். அனைத்து துறைகளின் பணியை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப் படுவார். போலீஸ், எக்சைஸ், வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். கோவிட் உள்ளிட்ட அனைத்து நோய் தடுப்பு பணியை சுகாதாரத்துறை ஒருங்கிணைக்க வேண்டும். எருமேலி பாதையில் அவசர சிகிச்சை மையம், குடிநீர், உணவு வசதி செய்யப்படும். யானை பக்தர்களை தாக்கும் சம்பவத்தை தடுக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும். பாம்புகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும். நவ.,ஐந்தாம் தேதி முதல் எருமேலி பாதையில் முழு வசதி செய்யப்பட்டிருக்கும். கேரள அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை இயக்கும். மகர விளக்குக்காக திருவாபரணம் வரும் பாதையில் ளாகாவில் இறக்கி வைக்கும் இடத்தில் 75 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வசதிகள் செய்யப்படும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். புல்மேடு பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகளிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன், உறுப்பினர் தங்கப்பன், பத்தணம் திட்டை, கோட்டயம், இடுக்கி மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.