சூரிய கிரகணம்: அக்.,25ல் பழநி கோயில் நடை அடைப்பு
பழநி: பழநி கோயில்களில் சூரிய கிரகணத்தன்று மதியம் 2:30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி மலைக்கோயிலில் அக்.,25, ல் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. அன்று சூரிய கிரகணம் மாலை 5:21 மணிக்கு துவங்கி மாலை 6:23 மணி வரை நடைபெற உள்ளது. எனவே மதியம் 2:30 மணிக்கு பழநி மலைக்கோயில் மற்றும் கோயில் நிர்வாகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள உபகோயில்கள் அனைத்து சன்னதிகளும் திருக்காப்பிடப்படும். அதன்பின் சூரிய கிரகணம் முடிவுற்று மாலை 7:00 மணிக்கு மேல் சம்ரோக்சன பூஜையும், தொடர்ந்து சாயரட்சை பூஜையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெறும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதியம் 12:30 மணிக்கு மேல் படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஆகியவற்றில் மலைக்கோயில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஏழு மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.