உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நிழல் கூண்டுகள் அமைத்தல்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நிழல் கூண்டுகள் அமைத்தல்

மேட்டுப்பாளையம்: வெயிலில் பாதிப்பு அடையாமல் இருக்க, பக்தர்கள் வசதிக்காக, வனபத்ரகாளியம்மன் கோவிலில், கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவில் பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால், வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், நீண்ட வரிசையில் திறந்தவெளியில், வெயிலில் காத்து வருகின்றனர். இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் வசதிக்காக நிழல் கூண்டுகள் அமைத்துள்ளன. இது குறித்து வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறியதாவது: வனபத்ரகாளியம்மன் கோவிலில், அம்மன் சுவாமியை வழிபட, பக்தர்கள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகத்தின் சார்பில், 4.75 லட்சம் ரூபாய் செலவில், 13 இரும்பு கூண்டுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூண்டுகளை தேவையான இடத்தில், நகர்த்தி வைக்க வசதியாக சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கூண்டுகள் வைக்கும் இடத்தில் வெயில் தரையில் படுவதில்லை. அதனால் பக்தர்கள் வசதிக்காக, பரிச்சார்த்த முறையில், நடைபாதையில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !