தேவதானம்பேட்டை மாரியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழா
செஞ்சி: தேவதனாம்பேட்டை மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடந்தது.
செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 16ம் தேதி காலை மற்றும் மாலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு புலவர் கந்தசாமி தலைமையில், புலவர் கருணாநிதி, புலவர் தனசேகரன் ஆகியோர் பங்கேற்ற பட்டி மன்றம் நடந்தது. 17 ம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு வழிபாடும், தொடர்ந்து நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் மாரியம்மன் வரலாறு வில்லுப்பாட்டு, கோலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. நேற்று (18 ம் தேதி) மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனையும், இரவு விசேஷ அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.