உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொடங்கியது

தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொடங்கியது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐப்பதி மாத முதல் நாள் தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொடங்கியது. ஆதின குருமகா சன்னிதானங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதத்தில் வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாண்டு ஐப்பசி மாத முதல் நாளான நேற்று முதல் நாள் தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், தெப்பக்குல காசி விஸ்வநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி ஆகியவை பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சுவாமி தீர்த்தம் கொடுக்க தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம், சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கட்டளை விசாரணை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினார். தொடர்ந்து இரு கரைகளிலும் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அன்பே சிவம் அறக்கட்டளை பாலசந்திர சிவாச்சாரியார், நகராட்சி சேர்மன் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !