உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் புகுந்தது : பக்தர்கள் வேதனை

ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் புகுந்தது : பக்தர்கள் வேதனை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மீண்டும் மழை நீர் புகுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலில் 3ம் பிரகாரத்தில் நீராடும் பக்தர்கள் சுவாமி, அம்மன் சன்னதி உள்ள முதல் பிரகாரத்தில் துணியுடன் வருவதை கோயில் நிர்வாகம் தடுத்து, பிரகாரத்தை சுத்தம், சுகாதாரமாக பராமரிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் கோயில் கிழக்கு ரதவீதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் முன் மண்டபத்திற்குள் புகுந்து, அரை அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. சுவாமி தரிசனம் முடித்து வெளியேறிய பக்தர்கள் தேங்கி கிடந்த மழை நீரில் சிரமத்துடன் நடந்து சென்றனர். இந்த முன்மண்டபம் முன்பு சிமெண்ட் கான்கிரீட்டில் தடுப்பு மேடை அமைக்காததே மழை நீர் புகுவதற்கு காரணம் ஆகும். ஓராண்டுக்கு ரூ. 20 கோடி உண்டியல், தீர்த்தம், சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் வருவாய் கிடைத்தும், மழைநீர் புகுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டு பக்தர்கள் வேதனை அடைந்தனர். அக்., 9ல் கோயிலில் சுவாமி சன்னதி சுற்றி மழை நீர் குளம்போல் தேங்கியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !