தஞ்சை கோவிலில் இந்திரன் சிலை மாயம் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை:தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இந்திரன் சிலை மாயமானதாகவும், மீட்க நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம், கூரியூர் அழகர்சாமி பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: முதலாம் ராஜராஜ சோழ மன்னனால் கி.பி., 11ம் நுாற்றாண்டில் தஞ்சாவூரில் பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் பிரகாரத்திற்குள் இந்திரன் சன்னதி உள்ளது. ஆனால், தற்போது வரை பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படவில்லை; பூஜைகள் நடக்கவில்லை. இது மக்களின் இறை உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. இங்கிருந்த இந்திரன் சிலை மாயமாகிவிட்டது; அதை மீட்க வேண்டும். இந்திரன் சன்னிதியை பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்க வேண்டும். பூஜைகள், இந்திர விழா நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர், கமிஷனர், தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நவ., 1க்கு ஒத்திவைத்தது.