12 அடியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட காளி சிலை: கர்நாடகா செல்கிறது
அவிநாசி: 12 அடியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட கொல்கத்தா காளி சிலை. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சாந்திராம என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் 12 அடி உயரத்தில் ஒரே கல்லாலான கொல்கத்தா காளி சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அக்கோயில் நிர்வாகத்தினர் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்பக் கலைக்கூடம் ஒன்றில் பணித்தனர். 12 அடி உயரம் கொண்ட 6 டன் எடை கொண்ட ஒரே கல்லில் கொல்கத்தா காளி சிலையில், பத்து தலைகள், பத்து கால்கள், ஏகசூலம், சங்கு, கதை, இரத்த கின்னம், கதிர் அரிவாள், அரக்கன்தலை, கத்தி, சாட்டை, வில் அம்பு,டமாரம் என பத்துக் கைகளிலும் பத்து ஆயுதங்கள் சிவன் ரூபத்தில் வந்த கொடூர அரக்கனை காலடியில் போட்டு மிதித்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளிக்கு 20 மனித தலைகள் கொண்ட மாலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 சிற்பிகள் கொண்ட குழு கடந்த ஆறு மாதமாக இப்பணியை மேற்கொண்டனர். இந்த சிலை வரும் ஞாயிறன்று கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சாந்திராம கிராமத்தில் உள்ள கோயிலுக்கு திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்ப கலைக்கூடத்திலிருந்து லாரி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.