பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில், பாலாலய கும்பாபிஷேக விழா பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி சவுராஷ்ட்ர பிராமண மகாஜனரங்களுக்கு சொந்தமான, ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயிலில், கடந்த 2007 ல் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவின் முன்னோட்டமாக, நேற்று பாலாலய பிரதிஷ்டா கும்பாபிஷேக விழா நடந்தது. இதன்படி நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன், யாகசாலை பிரவேசம் நடந்தது. பின்னர் முதல் காலையாக பூஜைகள் நிறைவடைந்து, மகாபூர்ணாகுதி நடந்தது. அஷ்ட பந்தனம் சாற்றுதல், பிம்ப சுத்தி திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 7:00 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்கி, மகா பூர்ணாகுதிக்கு பின் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது. பின்னர் 10:30 மணிக்கு சுந்தரராஜ் பெருமாள், சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார் மற்றும் ராஜ கோபுரம் உள்ளிட்ட அனைவருக்கும் பாலாலய பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீப ஆராதனைக்குப்பின், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.