சந்திர கிரகணம் : ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி சுவாமிகள் உலா
ராமேஸ்வரம்: சந்திர கிரகணம் யொட்டி ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் தீர்த்தவாரி சுவாமிகள் வீதி உலா வந்தனர்.
நேற்று மாலை 5:47 மணி முதல் 6:26 மணி வரை சந்திர கிரகணம் நடந்தது. இதனால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின் மாலை 4:50 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி சுவாமிகள் சந்திரசேகர், கவுரி அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்தம் கடற்கரையில் எழுந்தருளினர். பின் தீர்த்தவாரி சுவாமிக்கு கோயில் குருக்கள் உதயகுமார் தீபாராதனை நடத்தினார். பின் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்பின் கோயில் ரத வீதியில் தீர்த்தவாரி சுவாமிகள் வீதி உலா நடந்தது. பின் இரவு 7:20 மணிக்கு கோயில் நடை திறந்து சுவாமிக்கு கிரகண அபிஷேகம் நடந்தது. இதன்பின் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.