உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களுக்கு தங்கும் வசதி : கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலை பக்தர்களுக்கு தங்கும் வசதி : கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொச்சி, :மண்டல - மகர விளக்கு பூஜையின் போது சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழியில் உள்ள கோவில்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை, திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

அறிக்கை: இங்கு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல மகர விளக்கு பூஜை காலம் வரும் 17ல் துவங்குகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவது வழக்கம். சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், வரும் வழியில், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த இடங்கள் எடத்தவலம் என அழைக்கப்படுகின்றன.

சபரிமலை வரும் பக்தர்களுக்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் 52 எடத்தவலங்கள் உள்ளன. கொச்சி தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் இரண்டு எடத்தவலங்கள் உள்ளன. இங்கு, பக்தர்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, சபரிமலை அய்யப்பன் கோவிலின் சிறப்பு கமிஷனர், கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில், நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உறுதி: இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மண்டல - மகர விளக்கு பூஜையின் போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வழியில் உள்ள எடத்தவலங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை, திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும். அனைத்து எடத்தவலங்களிலும் தேவசம் போர்டு உதவி கமிஷனர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !