சபரிமலை செல்ல ஆன்லைன் பதிவு அவசியம் ஐந்து இடங்களில் ஸ்பாட் புக்கிங்
கூடலுார்: சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு ஆன்லைன் பதிவு அவசியம். பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக குமுளியில் இருந்து 5 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் நவ. 17 ல் துவங்குகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தாக்கத்தின் எதிரொலியாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் இல்லாத தரிசனத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத போதிலும் ஆன்லைன் பதிவு அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு குமுளி, 66 ம் மைல், பந்தளம், எரிமேலி, நிலக்கல் ஆகிய ஐந்து இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதுமானது.
பஸ் வசதி: தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து குமுளி வரை வருவதற்கு பஸ் வசதி உள்ளது. நவ. 17 முதல் குமுளியில் இருந்து எரிமேலி, பம்பைக்கு கேரள அரசு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.