பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்; தைப் பூசத்திற்கு முன்பாகவே புறப்பட்டனர்
திருப்புத்துார்: பழநிக்கு பாதயாத்திரையாக வெளிநாடு நகரத்தார் தைப் பூசத்திற்கு முன்பாகவே புறப்பட்டனர். செட்டிநாட்டு பகுதியிலிருந்து சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நகரத்தார் தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை செல்வதுண்டு. பழநிக் காவடியுடன் இவர்கள் பாரம்பரியமாக பாதயாத்திரையாகவே செல்கின்றனர். இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் குழுவாக திருப்புத்துார் வழியாக பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். நேற்று அதிகாலை பள்ளத்துாரில் யாத்திரை துவங்கி, மதியம் ந. வைரவன்பட்டியில் தங்கி மாலையில் திருப்புத்துார் வந்தனர். இவர்கள் டிச.28 ல் பழநியில் சாமி தரிசனம் செய்கின்றனர். காரைக்குடியைச் சேர்ந்த சிவனேசன் கூறுகையில், அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தாருக்கு தற்போது விடுமுறை காலம் என்பதால் முன்னதாகவே வந்து பழநியாத்திரை செல்கிறோம். 30 ஆண்டுகளாக இவ்வாறு செல்கிறோம். தற்போது யாத்திரையில் 60பேர் செல்கிறோம். 5 நாட்களில் பழநி சென்று சாமி தரிசனம் செய்வோம் என்றார்.