அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பிளக்ஸ் பேனரில் செயல்படாத தொலைபேசி எண் மற்றும் கட்டணம் விவரம்
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன் திருமணம் செய்து கொள்வதற்கான பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அலுவலகம் முகப்பில் பெரிய பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
இதில் மணமக்கள் இந்துமதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், மணமகனுக்கு 21 வயது மணமகளுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிடவைகளின் நகல்கள் இணைத்திருக்க வேண்டும் என பத்து விதிமுறைகளை பிளக்ஸ் பேனரில் தெளிவாக போட்டு, அலுவலர்களை தொடர்பு கொள்ள அலுவலக தொலைபேசி எண்ணை 04296273113 என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அதில் திருமணத்திற்காக இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்திற்கு கட்ட வேண்டிய தொகையினை குறிப்பிடப்படாமல் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், பிளக்ஸ் பேனரில் வைத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தாலும், கோவில் நிர்வாகம் தரப்பில் திருமணத்திற்காக கட்ட வேண்டிய தொகையினை வெளிப்படையாக தெரிவிக்காமல், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதேபோல தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை பக்தர்களோ அல்லது திருமணத்திற்காக பதிவு செய்யவும் விளக்கம் கேட்டு தொடர்பு கொண்டால் உபயோகத்தில் இல்லை என பல மாதங்களாக பதில் வருகிறது.மேலும் மாலை 5 மணிக்கு மேல் அலுவலகத்தில் உரிய அலுவலர்கள் இல்லாததால் கோவிலில் பணியில் உள்ள ஊழியர்கள் தங்கள் இஷ்டம் போல் திருமணத்திற்கு குறிப்பிட்ட தொகையினை கூறி வசூல் செய்து கொண்டு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையிணை மட்டும் குறிப்பிட்டு ரசீதை தருகின்றனர். அது குறித்து கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. இந்நிலையில் தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் அடிக்கடி நேரில் வந்து விசாரித்து விளக்கம் தர முடியாத சூழ்நிலைக்காக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்கிறோம். ஆனால்,உபயோகத்தில் இல்லாத எண்ணை பதிவிட்டுள்ளனர். இதனைக் கூட சரி செய்யாமல் கோவில் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றனர்.உடனடியாக திருமணத்திற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்ணையும் பதிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியிடம் கேட்டபோது, தான் பணியில் சேராததற்கு முன்பே வைக்கப்பட்ட பழைய பிளக்ஸ் பேனர் என்றார். அதே போல திருமணத்திற்கான கட்டணம் குறித்து கட்டணச்சீட்டு விபர பலகையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்ட தொலைபேசி எண் இயங்காது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.