உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலாற்றில் முடவன் முழுக்கு நிகழ்ச்சி மணலில் லிங்க வழிபாடு

பாலாற்றில் முடவன் முழுக்கு நிகழ்ச்சி மணலில் லிங்க வழிபாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் நேற்று முடவன் முழுக்கு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. குடும்பம் குடும்பமாக பொது மக்கள் சென்று ஆற்றில் மணலில் லிங்கம் செய்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் குளித்து அங்குள்ள மயூரநாதரை வழிபட்ட முடவன் ஒருவருக்கு சிவன், பார்வதி சமேதமாக காட்சியளித்து அவருக்கு மோட்சம் அளித்ததாக ஐதீகம். இதனால் இந்நிகழ்ச்சிக்கு முடவன் முழுக்கு என பெயர் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதே போல் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றில் அந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் நேற்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்தும் சிவனடியார்கள் ஆற்று மணலில் லிங்கம் அமைத்து அதில் மலர் அலங்காரம் செய்து பூஜை செய்தனர். இந்த ஆண்டு சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் நகர் மற்றும் சுற்று பகுதி கிராம மக்களும் பாலாற்றிக்கு குடும்பம் குடும்பமாக சென்று ஆற்று மணலில் லிங்கம் செய்து மலர் துாவி வழிபட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை, பார்வதி மணலில் லிங்கம் செய்து ஆரத்தழுவி வழிபட்டதால் அவருக்கு காட்சி அளித்து சாபம் விலகியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஏகாம்பரநாதர் மூலவர் மணல் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !