மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1030 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1030 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்தில், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 27ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. பரணி தீபம்: பின்னர், ‘ஏகன் அனேகன்’ என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில், நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதைக்கொண்டு, ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், அந்த பரணி தீபத்தை, மடக்கையில் (பெரிய அகல் விளக்கு) சரவண குருக்கள் கையில் ஏந்தியவாறு எடுத்துச்சென்று, அம்மன் சன்னதி உள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும், பரணி தீபம் ஏற்றினார்.பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்: அதை தொடர்ந்து பகல், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தனித்தனி தங்க விமானத்தில் பஞ்ச மூர்த்திகளும், மாலை, 4:30 மணி முதல், 5:30 மணிவரை மூன்றாம் பிரகாரத்தில் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து, மஹா தீபத்தை காண மலையை நோக்கியவாறு அமர்ந்தனர்.அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம்: பின்னர், பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடபாகத்தை அளித்ததை நினைவு கூறும் வகையில், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டே மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்க கொடிமரத்தின் முன், மலையை நோக்கியவாறு மாலை, 5:59 மணிக்கு எழுந்தருளினார்.மஹா தீபம் ஏற்றல்: அதே நேரத்தில் காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள அகண்ட தீபத்தில் தீபமேற்றி, அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டதும், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என, பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட, அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு இரண்டு நிமிடம் காட்சியளித்து, உடன் கோவில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றார். தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலா வந்து அருள்பாலித்தனர். அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்பட்ட மஹா தீபம் தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். இந்த ஜோதி, 40 கி.மீ., துாரம் வரை தெரியும்.
1030 days ago
1030 days ago