பசுவுக்கு வளைகாப்பு செய்த சிவனடியார்கள் திருக்கூட்டம்
சூலூர்: இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவிலில், பசுவுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது.
கோமாதாவான பசுவினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவிலில் வளைகாப்பு வைபவம் நடந்தது. சினையுற்ற பசுவுக்கு, மலர் மாலைகள், மஞ்சள், குங்குமம், வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. பொங்கல், புளியோதரை, எலுமிச்சை உள்ளிட்ட, ஒன்பது வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு, கோமாதாவுக்கு படைக்கப்பட்டன. முன்னதாக, தேவார, திருவாசக, கைலாய இசையுடன் சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான், அங்காளம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கோவை ஆனந்த வேதாஸ்ரமத்தின் நிறுவனர் ஈஸ்வரன் குருஜி, உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லிராஜ், கிழக்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.