கருப்பூரில் விஷ்ணு சிலை வருவாய்த்துறை விசாரணை
ADDED :1030 days ago
ஓமலுார்: கருப்பூரில் கால்வாய் அருகே கிடந்த, 2 அடி உயர மரச்சிற்ப விஷ்ணு சிலையை கைப்பற்றி, வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம் ஓமலுார், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன், 53. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 13ல் கருப்பூர் அருகே பரவக்காட்டில் விறகு எடுக்க சென்றார். அப்போது கால்வாய் அருகே, 2 அடி உயரத்தில், மரச்சிற்ப விஷ்ணு சிலையை கண்டெடுத்து வீட்டுக்கு எடுத்துச்சென்றார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று கருப்பூர் வருவாய் ஆய்வாளர் அறிவுக்கண்ணுவிடம், விஷ்ணு சிலை ஒப்படைக்கப்பட்டது. ஓமலுார் தாசில்தார் வள்ளமுனியப்பன் பார்வையிட்டு, அது பழமையான சிலையா என்பது குறித்து ஆய்வு செய்ய, தொல்பொருள் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.