தபோவனம் சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை விழா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தபோவனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 49 வது ஆராதனை விழா ஜனவரி 8ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில் சஹஜ சமாதியில் அருள்பாலித்து வரும் ஞானசித்தர் சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள். இவரது 49 வது ஆண்டு ஆராதனை விழா வரும் 25ம் தேதி காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், பாத பூஜையுடன் கொடியேற்றி துவங்குகிறது. 26 ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு கிருஷ்ண எஜூர் வேத பாராயணம், மகா ருத்ர ஜெபம், மகா சங்கல்பத்துடன், மகா கணபதி ஹோமம் ஆராதனை வரை தினசரி காலையில் நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 6:00 மணிக்கு வித்யா கடஸ்தாபனம், சண்டி பாராயணம், நவாவர்ண பூஜை, அதிஷ்டானத்தில் மகன்யாசம், ஏகாதச ருத்ர ஜெபம், லட்சார்ச்சனை ஆராதனைவரை தொடர்ந்து தினசரி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 6 ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு மாலை 3:00 மணிக்கு பரனூர் ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் பாகவத சப்தாக பிரவசனம் நடக்கிறது. ஆராதனை தினமான 8ம் தேதி காலை 5:30 மணிக்கு விசேஷ பாத பூஜை, லட்சாக்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், மதியம் 1:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை, நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த தபோவன டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.