மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4799 days ago
கோத்தகிரி:கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சி, பன்னீர் கிராமத்தில் உள்ள மாகாளியம்மன் மற்றும் முனீஸ்வரர் கோவில்கள் புனரமைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இக்கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோவிலை புனிதமாக்குதல், தெய்வ திருமேனிகளுக்கு ஆனைந்து ஆட்டி காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இளவஞ்சி கொடிக்கு இரண்டாம் கால வேள்வி, 108 வாசனை திரவியங்கள் நல்குதல், வேள்வி நிறைவாகுதி, அருள் உரு ஊட்டும் நிகழ்ச்சிகள் நடந்தன.காலை 9.00 மணிமுதல் 10.00 மணிவரை குடங்கள் கோவிலை வலம்வந்து, திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. இதில், பன்னீர் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழு, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.