உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொத்துகள் அனைத்தும் பக்தர்களுக்கு சொந்தம்: சாய்பாபா எழுதிய பிரகடன பத்திரம்!

சொத்துகள் அனைத்தும் பக்தர்களுக்கு சொந்தம்: சாய்பாபா எழுதிய பிரகடன பத்திரம்!

புட்டபர்த்தி: புட்டபர்த்தி, சத்ய சாய்பாபா டிரஸ்டுக்கு, பக்தர்கள் வழங்கிய சொத்துகள், காணிக்கை பொருட்கள் அனைத்தும், மக்களின் சேவைக்குச் சொந்தமானது என, சத்ய சாய்பாபா, "பிரகடன பத்திரம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என, வாழ்ந்து வந்த சாய்பாபா, புட்டபர்த்தியில் உள்ள அசையும், அசையா சொத்துகள் அனைத்தும், மக்களின் உபயோகத்திற்கு சேர வேண்டும் என, 1965ம் ஆண்டு எழுதி வைத்துள்ள பிரகடன பத்திரத்தின் மூலம், இத்தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்களே தனக்கு வாரிசுகள் என, நினைத்திருந்த சாய்பாபா, மறைந்து ஓராண்டுக்குப் பின், இப்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல், இ-மெயில் வடிவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாய்பாபா, எழுதியுள்ள பிரகடன பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நான் புட்டபர்த்தி கிராமத்தில் பிறந்தேன். தற்போது எனக்கு, 44 வயது. ஆரம்பக் கல்வியுடன் கல்வி பயில்வதை நிறுத்திக் கொண்டு, பக்தி மார்க்கத்திற்கு வந்து விட்டேன். 14 வயதில், தாய், தந்தையரை பிரிந்து வெளியேறி, பக்தியை நிலைநாட்ட பிரசாரம் துவக்கினேன்.எனக்கென தனி சொத்துகள், வருமானம் இல்லை; எஸ்டேட்டுகளும் இல்லை. எனது பக்தர்கள் என்னிடம் சமர்ப்பித்துக் கொண்ட நன்கொடைகள், மக்களின் உபயோகத்திற்கானவை. இந்த சொத்துகள், "டிரஸ்ட்ஆக, என் நிர்வாக மேற்பார்வையில் உள்ளது. எனது வாரிசு என, கூறிக்கொண்டு, சொத்துகள் மீது எவரும் உரிமை கொண்டாடக் கூடாது.இவ்வாறு, பிரகடன பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த பத்திரங்களை உறுதிசெய்து, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுக்லா சாட்சியாக கையெழுத்திட்டு உள்ளார். 1998ல், சத்யசாய் மத்திய டிரஸ்டின் நிர்வாகத்தில், மாணவர்களையும் பங்குதாரர்களாக சேர்த்து நிதி, அக்கவுண்ட்ஸ் போன்ற பிரிவுகளின் மேற்பார்வை பொறுப்புகளை, அவர்களிடம் பாபா ஒப்படைத்தார்.

மதிப்பு வாய்ந்த இப்பத்திரங்களை, பாதுகாப்பாக வைக்க வேண்டும் என, தனது, தனி செயலர் சத்யஜித்திடம் பாபா தெரிவித்திருந்தார். இதை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டாம். பத்திரமாக வைத்துக்கொள்; தகுந்த நேரம் வரும்போது உபயோகப்படும் என, அவர், சத்யஜித்திடம் கூறியிருந்தார். அதன்படி, இவ்வளவு காலம் இந்த பத்திரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது."சத்ய சாய்பாபா மறைந்து விட்டதால், இந்த பத்திரங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது என நினைத்ததால், இதை இப்போது வெளியிட்டேன் என, சத்யஜித் கூறியுள்ளார். மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த, சத்ய சாய்பாபாவின் கையெழுத்துடன் உள்ள, இந்த சொத்து பத்திரங்களின் விவரம், "சத்யசாய் இந்தியா வெப்சைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பத்திரத்தின் எந்த இடத்திலும், பாபாவின் தனி செயலர் சத்யஜித்தின் கையெழுத்து இல்லை. இந்தப் பத்திரங்கள், பத்திரிகை துறையினருக்கு இ-மெயில் மூலம் கிடைத்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !