உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதையம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த கோரிக்கை!

திரவுபதையம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த கோரிக்கை!

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில் திரவுபதையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மக்களின் அன்பளிப்பு மற்றும் உண்டியல் வசூல், மர மகசூல், ஏலம் ஆகியவற்றின் மூலம் தீ மிதி உற்சவம் நடக்கிறது. இதன் வரவு செலவு கணக்குகளை தி.மு.க.,வை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தராஜ் நிர்வகித்து வந்தார். இவரிடம் வசூல் செய்த பணம் ரூபாய் 64 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பவுன் நகைகள் மற்றும் வெண்கல சாமான்கள் உள்ளன.இந்தாண்டு வழக்கம் போல் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தராஜ் வரவு செலவு கணக்குகளை சரிவர கொடுப்பதில்லை. இதில் அதிருப்தியடைந்த கிராம மக்கள் இந்து அறநிலையத்துறையின் சார்பில் விழா நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ஆர்.டி.ஓ., மணிகண்டன் தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது. இதில், எவ்வித முடிவு எடுக்காமல் முடிவடைந்தது. ஆண்டுதோறும் நடத்தப்படும் தீமிதி திருவிழாவும் தள்ளிப்போய் உள்ளது. இதையடுத்து பஞ்சாயத்து தலைவர் இளவரசி ராமமூர்த்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதில், "புதுப்பள்ளியில் உள்ள திரவுபதையம்மன் ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் தீ மிதித் திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.முன்னாள் அறங்காவலர் முத்துமாரி மற்றும் கிராமவாசிகள் சேர்ந்து தமிழக முதல்வருக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !