உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா: ஏற்பாடுகள் தீவிரம்

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா: ஏற்பாடுகள் தீவிரம்

உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கையில் வருகிற ஜன. 5 அன்று சந்தனம் படி களைதலும், காலை 9:00 மணிக்கு மூலவர் மரகத நடராஜருக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.

இரவு 11:00 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும் அதனை தொடர்ந்து மறுநாள் ஜன., 6 அன்று அதிகாலை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் கே.பழனிவேல் பாண்டியன் கூறியதாவது; உத்தரகோசமங்கை மங்களநாதர் சாமி கோயில் வளாகத்தில் பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடந்தாண்டு பூசப்பட்ட சந்தன காப்பு களையப்படும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி சந்தன பாக்கெட் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்யும் வகையில் பொது தரிசனம், ரூ.10, ரூ.100 ரூ.250 என நான்கு பிரிவுகளாக மரத்தடுப்பு பாதுகாப்பு வேலிகள் அமைத்து சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர முக்கிய பிரமுகர்களுக்கான தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சிரமமின்றி வெளியில் செல்ல இரண்டு புதிய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.100 மற்றும் ரூ. 250 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலையில்லாத சந்தனம் வழங்கப்படும். பாதுகாப்பு கருதி 28 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 12 இடங்களில் குடிநீர் வசதியும் நீண்ட நேரமாக நிற்கும் பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் குடிநீரும், கோயில் நிர்வாகத்தால் வழங்கிட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவில் தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு பால் வழங்கப்படும். மதுரை, காரைக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் புதிய கலையரங்கத்தில் ஜன.5 அன்று காலை 9:00 மணி முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை நாட்டியாஞ்சலி நடக்க உள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 26 குழுவினர் பங்கேற்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !