மூடியே கிடக்கும் ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதி: ரூ.1 கோடி வீண்.. வீதியில் பக்தர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அமைத்த இலவச தங்கும் விடுதி ஓராண்டாக மூடியே கிடப்பதால், ஒரு கோடி ரூபாய் மக்கள் காணிக்கை வீணாகியது. மேலும் ஓய்வறை இன்றி பக்தர்கள் வீதியில் அமரும் அவலம் உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தர குடும்ப பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, சாப்பிட்டு செல்ல இலவச இடம் வசதி இல்லை. இதனால் பக்தர்கள் கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை நடைபாதை, ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமர்ந்து திறந்த வெளியில் சாப்பிட்டும், இயற்கை உபாதை கழித்து அவதிப்பட்டனர். சில சமயம் பெண்கள் இயற்கை உபாதை செல்லும் போது பாதுகாப்பற்ற சூழல் எழுகிறது. இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோயில் நிர்வாகம் ரூ. 1 கோடியில் ஆண், பெண் பக்தருக்கு தனித் தனியாக இலவச ஓய்வு விடுதி அமைத்து, 2015 முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு கழிப்பறை, குளியலறை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
சமூக விரோதிகள் : இங்கு பக்தர்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு ஓய்வெடுத்த நிலையில், இந்த விடுதிக்கு பக்தர்கள் வருவதில்லை எனக் கூறி கடந்த ஓராண்டுக்கு மேலாக கோயில் நிர்வாகம் விதியை மூடியது. இதனால் இரவில் சமூக விரோதிகள் புகுந்து மது குடித்து ரகளை செய்து, சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்குள்ள இரும்பு கதவுகள், கழிப்பறை குழாய்கள், மின் மோட்டார்களை உடைத்தும், திருடியும் சென்றுள்ளனர்.
வீதியில் பக்தர்கள் : கடந்த சில மாதமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், குறைந்த வாடகை அறை, இலவச ஓய்வறை கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் பக்தர்கள் பலரும் வீதியில் அமர்ந்து சாப்பிட்டு ஓய்வெடுத்து சென்றனர். இக்கோயிலில் ஓராண்டில் ரூ. 30 கோடி உண்டியல் காணிக்கை, கட்டண தரிசனத்தில் கிடைத்தும் பக்தர்களுக்கு இலவச தங்கி விடுதியை பராமரிக்க கூட கோயில் நிர்வாகம் முன்வராதது வேதனைக்குரியது. இந்த இலவச விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோயில் அதிகாரியிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.
காணிக்கை வீண் : பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் ரூ.1 கோடியில் அமைத்த இலவச தங்கும் விடுதி பராமரிப்பு இன்றி மூடியே கிடப்பதால், கட்டடம் பலவீனமாகி ஓரிரு ஆண்டில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்கள் நலன் கருதி இலவச தங்கும் முடிவை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.