உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா

நாளை திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா

தஞ்சாவூர்,: திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின், 176வது ஆராதனை விழா, நாளை துவங்குகிறது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் விழாவை துவக்கி வைக்கிறார்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜர் சுவாமிகள் முக்தியடைந்த திருவையாறில், ஆண்டுதோறும், ஐந்து நாட்கள் ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்கும், ஆராதனை விழா நடைபெறும்.கடந்த இரண்டு ஆண்டாக, கொரோனா பரவலால் குறைந்த எண்ணிக்கையிலான இசை கலைஞர்கள் மட்டுமே ஆராதனை விழாவில் பங்கேற்றனர். இந்நிலையில், தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா, நாளை மாலை 5:00 மணிக்கு, மங்கள இசையுடன் துவங்கிறது. தியாகப்பிரும்ம சபா தலைவர் வாசன் விழாவுக்கு தலைமை வகிக்கிறார். சபா செயலர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்கிறார். தொடர்ந்து, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், இசை நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். மறுநாள், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாலையில், கர்நாடக இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.ஜன., 11ல் விழா பந்தலில், காலை 8:00 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9:00க்கு ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான, கர்நாடக இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர். நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்கிறார். தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், இரவு 8:00க்கு தியாகராஜர் சுவாமிகள் முத்துப் பல்லக்கில் வீதி உலாவும், இரவு 10:30க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் இசை விழா முடிவடைகிறது.விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., ரஞ்சித், திருவையாறு டி.எஸ்.பி., ராஜ்மோகன், தாசில்தார் பழனியப்பன் நேற்று ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !