உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனதுர்கையம்மனுக்கு இருமுடி எடுத்து சென்று பக்தர்கள் வழிபாடு

வனதுர்கையம்மனுக்கு இருமுடி எடுத்து சென்று பக்தர்கள் வழிபாடு

செஞ்சி: தேவதானம்பேட்டை வனதுர்கையம்மனுக்கு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி சுமந்து சென்று வழிபாடு நடத்தினர். செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் அடர்ந்த காட்டின் நடுவே உயர்ந்த மலை மீது சித்தர்கள் வழிபட்ட பழமையான வன துர்கை கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியன்று வெகு விமர்சையாக விழா நடத்தி வருகின்றனர். மார்கழி மாதம் தேவதானம்பேட்டையை மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து பவுர்ணமியன்று இருமுடி எடுத்து சென்று வழிபாடு நடத்து கின்றனர். இந்த ஆண்டு இருமுடி விழா பவுர்ணமியன்று நடந்தது. அன்று காலை திரவுபதியம்மன் கோவிலில் இருந்து மாலை அணிந்து விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி சுமந்து சென்றனர். முன்னதாக இருமுடி சுமந்த பக்தர்களுக்கு கிராம மக்கள் பாத பூஜை செய்து வழியனுப்பினர். வனதுர்கை கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரமும் மகா தீபாராதனையும் செய்து வழிபட்டனர். ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !