பழநியில் பக்தர்கள் கூட்டம்: ஆக்ரமிப்பால் அவதி
பழநி: பழநி மலைக்கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் முருக பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்தது.
பழநியில் மலைக் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்திலிருந்து அதிக அளவில் தனியார் வாகனங்களில் வந்தனர். விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில முருக பக்தர்கள் வருகையும் பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர். தனியார் மற்றும் தேவஸ்தான கடைகளில் பக்தர்கள் அதிக அளவில் பஞ்சாமிர்தம் வாங்க கடைகளில் கூட்டம் நிரம்பியது. மலைக்கோயிலில் காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் வந்த வெளி மாநில வாகனங்கள் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியதால், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, அய்யம்புளி ரோடு, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். நகரில் வாகனங்கள் போக்குவரத்து அதிகம் இருந்ததால் அடிவாரம், அய்யம்புள்ளி ரோடு, கிரிவிதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, தேவஸ்தான விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பின. பக்தர்கள் அறை கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். ஆக்கிரமிப்பால் தொல்லை: பழநி, கிரிவீதியில் சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால் பக்தர்கள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர். கிரிவிதியின் நடுவில் வட மாநிலத்தவர் தட்டு கடைகளை வைத்து பக்தர்களை தொல்லை செய்து வருகின்றனர். சன்னதி வீதி அய்யம்புள்ளி சாலையில் செல்லும் வாகனங்களுக்கு செல்ல பக்தர்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பழநி அடிவாரம் பகுதியில் பக்தர்கள் அதிக அளவில் வந்து குவிவதால் கிரி வீதி, சன்னதி வீதி அய்யம்புள்ளி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறும். ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் பெருகி உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.