உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போலி மஹா தீப மை விற்க முயற்சி: கும்பலை பிடிக்க வலியுறுத்தல்

போலி மஹா தீப மை விற்க முயற்சி: கும்பலை பிடிக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை: போலி மஹா தீப மை விற்பனை செய்ய, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பெயரில், போலி பேஸ்புக் ஐ .டி., வெளியிட்டு, மோசடியில் ஈடுபடும் கும்பலை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்படும் மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று,  நடராஜர், சிவகாமிசுந்தரி அம்மனுக்கு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.

இந்த தீப மை பிரசாதம் அணிவதால்,  எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும், தொழிலில்  முன்னேற்றம் அடையவும், பில்லி, சூனியம் போன்றவை தாக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் தீப மை பிரசாதம், 10 கிராம் கொண்ட பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 65 லட்சம் ரூபாய்க்கு மேல், கோவில் நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால் தீப மைக்கு கிராக்கி உள்ளதால், கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்கு கூரியர் மூலம், அனுப்பி வைப்பதாக கூறி, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பெயரில், போலி பேஸ்புக் ஐ.டி., உருவாக்கி சில சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் பக்தர்கள் பதிவு செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம், போலி பேஸ் புக் முகவரியை முடக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் கூறியதாவது: அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பெயரிலுள்ள பேஸ் புக் ஐ.டி.,க்கும்,   கோவில் நிர்வாகத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. தபால் துறை மூலமாக மட்டுமே, தீப மை அனுப்பப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை, பக்தர்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !