பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை: கண்ணாடியில் நிலவைப் பார்த்து பக்தர்கள் வேண்டுதல்
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பண்ணாரி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கண்ணாடியில் நிலவைப் பார்த்து பக்தர்கள் வேண்டுதல் நடத்தினர்.
துடியலூர் அருகே உருமாண்டம்பாளையம் பண்ணாரி அம்மன் கோவிலில் கோமாதா பூஜை, மாங்கல்ய பூஜை, அன்னதானம், பவுர்ணமி பூஜை ஆகியன நடந்தன. அப்போது பக்தர்களுக்கு பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழாவில், சிறுமிகள் பங்கேற்று, 13 வகை பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்தனர். மாங்கல்ய பூஜையையொட்டி, 80 வயதுக்கு மேல் வாழ்ந்த தம்பதியினரை அமர வைத்து, பெண்கள் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். பூஜையையொட்டி, சந்திர பகவானை வழிபட்ட பெண்கள், சாமியின் முன்பு நிலா தெரியும்படி வைக்கப்பட்டு இருந்த நிலை கண்ணாடிக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.