பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடுபறி உற்சவம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராப்பத்து விழாவின் 8 ம் நாளில் வேடுபறி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனக்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் டிச., 23 அன்று பகல் பத்து துவங்கி நடந்தது. தொடர்ந்து ஜன., 2 ல் பரமபத வாசல் வழியாக பெருமாள் அருள் பாலித்த நிலையில், அன்று இரவு ராப்பத்து விழா துவங்கியது. இதன்படி 8 ம் நாள் விழாவான நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் திருமண கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கை மன்னன் பெருமாள் கோயிலை கட்டி எழுப்ப செல்வந்தர்களிடம் பொருட்களை திருடும் தொழில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து மன்னன் திருமண கோலத்தில் சென்ற பெருமாள் மற்றும் தாயாரை வழிமறித்து பொன், பொருட்களை கேட்டார். மேலும் காலில் இருந்த கணையாளியை மட்டும் கழற்ற முடியாமல் இருந்தது. இந்நிலையில் பெருமாள், மன்னனின் காதில் தானே, ஓம் நமோ நாராயணா என்ற திருமந்திரத்தை கூறி கணையாளியை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மன்னன் திருமங்கை ஆழ்வாராக போற்றப்பட்டார். இவர் 108 திவ்ய தேசங்களில் 82 கோயில்களுக்கு சென்று மங்களா சாசனம் பாடி உள்ளார். இத்துடன் 12 ஆழ்வார்களில் அதிகமான பாசுரங்களை பாடியவரும் இவரே ஆவார். இந்த நிகழ்வு பரமக்குடி பெருமாள் கோயிலில் கோலாகலமாக நடந்தது. அப்போது கோயிலில் அர்ச்சகர் பாசுரங்களை சேவித்து, பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.