உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்

ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்

குன்னூர்: குன்னூர் கிராமத்தில் படுகர் இன மக்களின், பாரம்பரிய கன்னி ஹெத்தையம்மன் திருவிழா, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியுடன், நிறைவுபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் 14 கிராமங்களில்,படுக இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதில், ஜெகதளா எட்டூர் மக்களால் கொண்டாப்படும், இந்த பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர்; காரக்கொரையில் பூ குண்டம் இறங்கினர். நேற்று கன்னி ஹெத்தையம்மன் கோவில், அமைந்துள்ள ஜெகதளாவில், பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவிலில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை அம்மனுக்கு சார்த்தப்பட்டது. மடியரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, துவங்கிய அம்மன் ஊர்வலத்தில், ஹெத்தை தடியுடன், நூற்றுகணக்கான ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக ஜெகதளா வந்தனர். இதில், குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன் ஹெத்தை அம்மனை பூசாரி தனது தலையில் சுமந்தவாறு, வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. வரும் வழியில் வேட்டிகளை விரித்து, அதன் மீது நடக்க வைத்த மக்கள் தரையில் விழுந்து வழிபட்டனர். ஜெகதளா கோவிலில் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இங்கு விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !