ராமானுஜ பஜனை மடத்தில் கூடாரவல்லி உற்சவம்
புதுச்சேரி : முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில் ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவம் நேற்றுநடந்தது.
முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமாநுஜ பஜனை மடம் மற்றும் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவம் நேற்றுமுன்தினம் மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. புன்னை மரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவம் நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. கண்ணன்-ஆண்டாள் நாச்சியார் உற்சவ மூர்த்திகளுக்கு கலச திருமஞ்சனமும், தொடர்ந்து 9.05 மணிக்கு பெண் அழைப்பு நடந்தது. சந்துவெளி மாரியம்மன் கோவிலிலிருந்து பள்ளத் தெரு வழியாக நடந்த பெண் அழைப்பில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சீர் வரிசையுடன் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு மேல் ஆண்டள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து மணக்கோலத்தில் சுவாமி, தாயார் கோதை நாச்சியாருடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூன்றாம் நாளான இன்று 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு பஜனை மட திருக்கோவில் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.