ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கில் குடிநீர் கட் : பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி முடங்கி கிடப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கார் பார்க் ஜெ.ஜெ., நகரில் உள்ளது. இங்கு தினமும் 100க்கு மேலான வாகனங்களை பக்தர்கள் நிறுத்தி கோயிலுக்கு செல்கின்றனர். இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, ஓய்வறை கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளது. இதனை துவக்கத்தில் கோயில் நிர்வாகம் பராமரித்த நிலையில் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டனர். இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகியது. இதனை கோயில் நிர்வாகம் சரி செய்யாததால், பக்தர்கள் தாகம் தணிக்க குடிநீர் இன்றி, கடையில் ஒரு லிட்டர் ரூ.20 க்கு வாங்கி பருகும் அவலம் உள்ளது. மேலும் கழிப்பறையில் தண்ணீர் சப்ளை இல்லாததால், கழிப்பறை சுகாதார கேடாக உள்ளது. இதனால் பக்தர்கள் தனியார் கழிப்பறைக்கு ரூ. 10 கொடுத்து இயற்கை உபாதை கழிக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி கூட கோயில் நிர்வாகம் செய்யாமல் அலட்சியமாக இருப்பது பக்தர்களிடம் வேதனை அளிக்கிறது.