உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை : முழுநிலவு வானில் பிரகாசித்த அதிசய நாள்.. அம்பிகை அருள் கிடைக்க அபிராமி அந்தாதி படிங்க..!

தை அமாவாசை : முழுநிலவு வானில் பிரகாசித்த அதிசய நாள்.. அம்பிகை அருள் கிடைக்க அபிராமி அந்தாதி படிங்க..!

நாளை தை அமாவாசை. சுப்பிரமணிய பட்டருக்காக அமாவாசை தினத்தில் அம்பிகை திருவருளால் முழுநிலவு வானில் பிரகாசித்த அதிசய நாள். உச்சரிப்பில் பிழையுடன் பேசுபவர்களால் "லலிதா சகஸ்ர நாமம்" படிக்க/பாட சற்று கடினமாக இருக்கும். காரணம் சமஸ்கிருத எழுத்துக்கள் நிறைந்து இருக்கும். சில எழுத்துக்கள் நாவில் வராது. அவர்கள் துயர் தீர்க்கத் தான் அம்பிகை சுப்பிரமணிய பட்டரை படைத்தாள். பட்டர் அந்தணர் மரபில் பிறந்தவர். சிறுவயதிலே "லலிதா சகஸ்ர நாமத்தை" ஓதாமலே கற்றுணர்ந்தார் ஆதலால் "அபிராமி அந்தாதி" முழுவதும் சகஸ்ர நாமத்தில் வரும் கருத்துக்களை உட்புகுத்தி இருப்பார். அதாவது அம்பிகை வர்ணனை, அழகு, சக்தி, தாய்மை என்று நிறைய இடத்தில் ஒரே மாதிரியான கருத்துக்கள் வரும். (உ.தா) சகஸ்ர நாமம் துவங்கும் போது "ஓம் ஸ்ரீ மாத்ரே நம" என்று துவங்கும். அந்தாதி முடிவில் "ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை" என்று முடித்து இருப்பார்.

எல்லோருக்கும் எதாவது ஒரு பயம் இருக்கும். கரப்பான்பூச்சியைப் பார்த்தால் சிலருக்கு பயம், இரவு பேருந்தில் பயணிக்க சிலருக்கு பயம், திருமண பயம், மனைவி பயம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் உச்சகட்ட பயம் எது என்றால் மரண பயம் தான். இந்த மரண பயம் போக்க வழியே 51வது பாடலில் நமக்கு சொல்லுகிறார். சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார், மரணம்/பிறவி எய்தார், இந்த வையகத்தே!" சரணம் சரணம் என்று அம்பிகையின் திருவடிகளை சிக்கெனப் பிடித்தால் மரணபயமும் நீங்கும். இறந்தாலும் அவர்களுக்கு பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுதலை கிடைக்கும்; நேராக முத்தி தான், அடுத்த பிறவியே கிடையாது.

அம்பாளை வணங்கினால் நமக்கு என்ன தருவாள்? நிறைய அன்பர்க்கு சந்தேகம் உள்ளது. அவர்களுக்காக ஒரு பட்டியல் விளக்கம் தருகிறார் தனது 69வது பாடலில்…

"தனம் தரும் கல்வி தரும் ஒரு
நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள்
அபிராமி கடைக்கண்களே" முதலில் கல்வி செல்வம் தருவாள், பொன், பொருள் தருவாள், எதையும் எதிர் கொள்ளும் மனம் தருவாள், தெய்வ வடிவும் தருவாள், வஞ்சகம் அற்ற நெஞ்சம் தருவாள், இன்னும் என்ன நல்லது உண்டு அனைத்தயும் கனத்தில் வந்து தினமும் தருவாள் என்கிறார் பட்டர்.

சிவபெருமான் அந்தாதி, மஹாலட்சுமி அந்தாதி, சரஸ்வதி அந்தாதி என்று நிறைய உள்ளது. ஆனால் அபிராமி அந்தாதி மட்டும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற காரணம் என்ன? மற்றவை அனைத்தும் கடவுளை கடவுளாக பாவித்து பாடப்பட்டது. ஆனால் அபிராமி அந்தாதி மட்டுமே ஒருபடி மேல் சென்று அம்பிகையே பெற்ற தாயாக பாவித்து பாடப்பட்டது. உயர்ந்த பந்தமான தாய் - பிள்ளை என்ற நிலையில் பாடப்பட்டது. சிறியேன் பதிவு செய்தது கடுகு அளவே இன்னும் மலையளவு சிறப்புகள் நிறைந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் 100 பாடலும் பாடும் போது நம் அருகில் அம்பிகை அமர்ந்துள்ளதை உணரலாம். அபிராமி அந்நாதி பாடி அம்பிகை திருவருளை பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !