மார்ச் 3, 4ல் கச்சதீவு திருவிழா : தமிழக பக்தர்கள் 3500 பேருக்கு அனுமதி
ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 3, 4ல் நடக்க உள்ளது. விழாவுக்கு தமிழக பக்தர்கள் 3500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதித்து உள்ளது.
பாக்ஜலசந்தி கடலில் அதாவது ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசு அனுமதியுடன் யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்ச் 3 ல் கச்சத்தீவு சர்ச்சில் கொடி ஏற்றி, அன்றிரவு சிலுவை பாதை திருப்பலி பூஜையும், மறுநாள் (டிச., 4 ) திருவிழா திருப்பலி பூஜையும் நடக்க உள்ளது. இவ்விழாவில் தமிழக பக்தர்கள் 3500 பேரும், இலங்கை பக்தர்கள் 4500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. மார்ச் 3 ல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகில் 3500 பக்தர்கள் கடல் பயணம் செய்து கச்சதீவு செல்வார்கள். மறுநாள் ( டிச., 4) திருவிழா முடிந்ததும் அங்கிருந்து படகில் புறப்பட்டு ராமேஸ்வரம் வருவார்கள். ராமேஸ்வரம் சர்ச் நிர்வாகிகள் பக்தர்களை ஒருங்கிணைத்து திருவிழாவுக்கு அழைத்து செல்வார்கள்.