திருவிடைக்கழி கோயிலில் தை கிருத்திகை : 1008 சங்காபிஷேகம்
மயிலாடுதுறை; திருவிடைக்கழி கோவிலில் தை மாத கிருத்திகை சோமவாரத்தை முன்னிட்டு முருக பெருமானுக்கு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முருகனை மனம் செய்ய விரும்பிய தெய்வானை தவம் செய்த தலமாக விளங்கி வரும் திருவிடைக்கழி கோவிலில் சிவபெருமானை பூஜித்த நிலையில் முருக பெருமான் அருள் பாலிக்கிறார். இத்தலம் திருச்செந்தூருக்கு நிகராக போற்றப்படுகிறது. இத்தலத்தில் உள்ள குரா மரத்தின் அடியில் தியானம் செய்ய மனதெரிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். மேலும் முருகன், தெய்வானை திருமண நிச்சயம் நடைபெற்ற தலமாதலால் இங்கு வழிபடுபவருக்கு தீரா பழி நீங்கி, மனதெரிவு, சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும் எனவும் கூறப்படுகிறது. சூரபத்மனின் மகனும், சிவ பக்தனுமான இரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற தலமான இங்கு மூன்று முதல் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம், கிருத்திகையுடன் வரும் சோமவார திருநாளில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். தை மாத கிருத்திகைடன் கூடிய சோமவார தினமான இன்று நெல்லின் மேல் 1008 சங்குகள் வைத்து, புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பம் மற்றும் சங்குகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் பிரகாரத்தை வலம் வந்து தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தை கண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.