ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் ரதம் : பக்தர்கள் ஆர்வம்
ADDED :1020 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வந்த கோவை ஈஷா ஆதியோகி சிவன் ரதத்தை, பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு தரிசித்தனர். கோவை ஈஷா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை உள்ளது. இங்கு பிப்., 18 மாசி மகாசிவராத்திரி அன்றிரவு சிறப்பு பூஜைகள், தியானம் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடக்கும். இதில் உலகமெங்கும் உள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்றிரவு விழித்திருந்து தியானம் செய்து, நடனமாடி சிவராத்திரி விழா கொண்டாடுவார்கள். இவ்விழாவில் தமிழக மக்கள் பங்கேற்கும் விதமாக ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் டிச., 16ல் கோவையில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் உலா வந்து நேற்று ராமேஸ்வரம் வந்தது. இதனை பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு தரிசித்தனர். இந்த ரதம் பிப்., 17ல் கோவை ஈஷா மையம் சென்றடையும்.