கச்சத்தீவு திருவிழா செல்ல ஒரு பக்தருக்கு கட்டணம் ரூ. 2 ஆயிரம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு சர்ச் திருவிழாவிற்கு படகில் செல்ல ஒரு பக்தர் கட்டணம் ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டும் என ராமேஸ்வரம் பாதிரியார் தெரிவித்தார்.
பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 3, 4ல் நடக்கிறது. இவ்விழாவில் தமிழகம், இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதித்து உள்ளது. மார்ச் 3 ல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் விசை, நாட்டுப்படகில் பக்தர்கள் கடல் பயணமாக கச்சதீவு செல்வார்கள். மறுநாள் (மார்ச் 4) விழா முடிந்ததும் பக்தர்கள் படகில் புறப்பட்டு ராமேஸ்வரம் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை ராமோஸ்வரம் கச்சத்தீவு திருப்பணி குழு செய்கிறது.
இதுகுறித்து ராமேஸ்வரம் பாதிரியார் தேவசகாயம் கூறுகையில் : கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க யாழ்ப்பாணம் முதன்மை குருக்கள் அழைப்பு விடுத்துள்ளார். விழாவில் 60 விசைப்படகுகள், சில நாட்டுப்படகில் 3 ஆயிரம் பக்தர்கள் செல்ல உள்ளனர். ஒரு பக்தருக்கு படகு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும். ராமேஸ்வரம் சர்ச் வளாகத்தில் பிப்., 2, 3ல் விண்ணப்பம் வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் தவிர அனைத்து வெளியூர் பக்தர்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நற்சான்றும், அரசு ஊழியர்கள் தடையில்லா சான்றும் வாங்கி விண்ணப்பத்துடன் இணைத்து அனைவரும் பிப்., 10 க்குள் கொடுக்க வேண்டும். இந்தாண்டு பக்தர்களை படகில் ஏற்ற இடநெருக்கடி உள்ளதால், ஒரு படகில் 35 பக்தர்கள் உள்ளிட்ட 40 பேர் செல்ல அனுமதி வேண்டி கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.