உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சூலூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சூலூர்: சூலூரில் பழமையான வேங்கடநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நேற்று நடந்தது.

சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பெரிய குளக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத திரு வேங்கடநாத பெருமாள் கோவில், 1000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பழமையான இக்கோவிலில், திருப்பணிகள் முடிந்து கடந்த, 7 ம்தேதி பகவத் பிராத்தனையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி பூஜை முடிந்து, முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. ஐந்து கால ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, திருமஞ்சனம், வேத பாராயணம் உள்ளிட்டவைகள் கடந்த இரு நாட்களாக நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆறாம் கால ஹோமம் துவங்கியது. 8:00 மணிக்கு , புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டு, காலை, 10:00 மணிக்கு விமானம் மற்றும் பரிவாரங்கள், ஸ்ரீ தேவி பூதேவி சமேத திரு வேங்கடநாத பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிந்தா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசித்தனர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகாளார், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், தாச பளஞ்சிக சமூக, சூலூர் திருவேங்கடநாத பெருமாள் குல தெய்வ வழிபாட்டு குழுவினர், புதூரார் மருதாசல தேவர் திருத்தேர் அறக்கட்டளையினர், அன்னதான கமிட்டி, மார்கழி கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !