குன்னூர் தேவ அன்னை தேர்பவனியில் திரண்ட பக்தர் கூட்டம்
குன்னூர் : மின்னொளி சப்பரத்தில் ஜொலித்தப்படி பாய்ஸ்கம்பெனி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது.
அருவங்காடு பாய்ஸ்கம்பெனி தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது; ஊட்டி மறைமாவட்ட பிஷப். அமல்ராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. மதியம் 12.00 மணிக்கு, தேவாலய வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5.00 மணிக்கு அருட்திரு. ஆல்வின் தலைமையில் திருப்பலி நடந்தது. பின், வண்ண மலர்கள், மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த சப்பரத்தில், தேவ அன்னை பவனியாக வந்தார். பாய்ஸ்கம்பெனி, அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை குடியிருப்பு, அருவங்காடு மெயின் கேட், கோபாலபுரம் வழியாக பவனி திருத்தலம் வந்தது.
பவனியில் வந்தவர்கள் கேண்டில் ஏந்தி, சப்பரத்தின் மீது உப்பு வீசி பக்தி பாடல் பாடி வந்தனர். பாய்ஸ்கம்பெனி ஆட்டோ டிரைவர்கள் சங்கம், கேட்டில் பவுண்டு வியாபாரிகள், கோபாலபுரம் கிராம நற்பணி மன்றத்தினர் சார்பில் ஆங்காங்கே அலங்கார மேடை அமைக்கப்பட்டு,மாதா சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பங்கு குரு இம்மானுவேல் நன்றி கூறினார். இரவு 9.00 மணிக்கு நற்கருணை ஆசிருடன் விழா நிறைவு பெற்றது.
கொட்டு மழையில் கோத்தகிரி உற்சாகம்;
பிரசித்த பெற்ற கோத்தகிரி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழா நாளான நேற்று காலை 6.30, 7.35 மணி திருப்பலியை தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. கொட்டும் மழையிலும் உற்சாகமாய் திருப்பலியில் பங்கெடுத்தனர் பக்தர்கள். மாலை திருப்பலிக்கு பின், பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்ட தேவ அன்னையில் சப்பரம் நகர வீதிகளின் வழியாக வந்தது. திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.