ஆண்டாள் கோயிலுக்கு தங்க ரதம் : வாரத்தில் 3 நாள் இழுக்க ஏற்பாடு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பக்தர்கள் வேண்டுதலுக்காக, உருவாக்கப்பட்டுள்ள தங்க ரதத்தை, வாரத்தில் 3 நாள் இழுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பாஷ்யகாரா டிரஸ்ட் சார்பில், இக்கோயிலுக்கு 1 கோடி ரூபாயில், தங்க ரதம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நடத்தப்பட்ட நிலையில், நேற்று மாலை பக்தர்கள் வேண்டுதலுக்காக, தங்க ரத பவனி நடந்தது. ரதத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை, இந்து அறநிலைய துறை அலுவல் சாரா ஆலோசகர் குழு உறுப்பினர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா துவக்கி வைத்தார். தக்கார் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் கவிதா பிரியதர்ஷனி, செயல் அலுவலர் வேல் முருகன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தங்க ரதத்தை வாரத்தில் வெள்ளி,சனி,ஞாயிறு கிழமைகளில், சிறப்பு கட்டணத்தின்பேரில், பக்தர்களால் இழுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.