உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலை சீரமைக்கும்படி பக்தர்கள் வேண்டுகோள்!

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலை சீரமைக்கும்படி பக்தர்கள் வேண்டுகோள்!

திருச்சி: பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக கருதப்படுவது, திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுக்கு முன், செங்கோட்சோழனால் கட்டப்பட்ட திருத்தலம்.கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், கி.மு., 1178ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக்கு முன், சுண்ணாம்புக்காரை கொண்டு கட்டப்பட்டது. 88 அடி உயரமும், 45 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்டது.திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மகா ஸந்நிதிதானம் வழங்கிய, 85 ஆயிரம் ரூபாயை கொண்டு, சீரமைப்பு செய்யப்பட்டு, 26.06.1970ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 2,000ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அதன்பின், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்ற ஐதீகத்தின்படி, நடப்பாண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கவேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. கிழக்கு ராஜகோபுரம், கார்த்திகை கோபுரம், மேற்கு ராஜகோபுரம் உள்ளிட்ட ஐந்து கோபுரங்களில் இருந்து சுதைகள் (சுண்ணாம்புக்காரையால் செய்யப்பட்ட பொம்மைகள்) உடைந்து விழுவது தொடர்கதையாக இருக்கிறது.கோவிலுக்கு சொந்தமான அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ராமர் தீர்த்தம் போன்ற குளங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி, குட்டை போல நீர் தேங்கி, நோய் பரப்பும் மையங்களாக மாறிவிட்டன.

கடந்த முறை திருவானைக்காவலில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றபோதே, திருவானைக்கோவில் கும்பாபிஷேக தேதியை அறிவிப்பார் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர். இன்று ஸ்ரீரங்கத்தில் நடக்கும் அரசு விழாவிலாவது, திருவானைக்கோவில் கும்பாபிஷேக தேதியை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பக்தர் வருகை அவசியம்:
ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவில்களுக்கு பஸ்களில் வரும் பக்தர்கள் திருவானைக்கோவிலுக்கு வருவதுக்கு விரும்பினாலும், கோவிலுக்கு வரும் சாலை குறுகியதாகவும், போக்குவரத்துக்கு நெரிசலாகவும் இருக்கிறது. பஸ் போன்ற பெரிய வாகனங்கள் நிறுத்த "பார்க்கிங் வசதிகளும் அறவே இல்லை. இதனால் திருவானைக்கோவிலுக்கு வருவதை வெளியூர் டிரைவர்கள் தவிர்த்துவிடுகின்றனர்.எனவே, சென்னை பை-பாஸ் சாலையில் இருந்து மேற்கு ராஜகோபுரம் வரை, 70 அடி சாலை அமைத்து, ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரியின் அருளை வெளியூர் பக்தர்கள் பெற, தொகுதியின் எம்.எல்.ஏ.,வும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !