ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை தினம் : ராமேஸ்வரம் கோயிலில் ருத்ர பூஜை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை செய்த தினம் யொட்டி நேற்று சிருங்கேரி மடம் சார்பில் ருத்ர பூஜை நடத்தினர்.
ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி சன்னதியில் உள்ள ஸ்படிகலிங்கம் 2021 பிப்ரவரியில் பின்னமானது. இதற்கு பதிலாக சிருங்கேரி மடத்தின் சார்பில் புதிய ஸ்படிக லிங்கம் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். இந்நாளை கொண்டாடும் விதமாக சிருங்கேரி சுவாமிகள் வழங்கிய வஸ்திரத்துடன் நேற்று மாலை சிருங்கேரி மடம் நிர்வாகிகள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின் சுவாமி சன்னதி அருகே புனித கலசநீர் வைத்து மேல்மங்கலம் சிருங்கேரி மடத்தின் வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க மகாருத்ர பூஜை நடந்தது. இதில் திருப்பூர் சிருங்கேரி மடம் ஆடிட்டர் ராமநாதன், மதுரை சிருங்கேரி மடம் தர்ம அதிகாரி நடேஸ்ராஜா, மதுரை மடத்தின் வக்கீல்கள் மாதவன், ரமேஷ், சங்கரன், நாகர்கோவில் சிருங்கேரி மடம் தர்ம அதிகாரி சுரேஷ், ராமேஸ்வரம் சிருங்கேரி மடம் மேலாளர் மணிகண்டி நாராயணன், நிர்வாகி மணிகண்டி கார்த்திக் உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.