வழிபாட்டு தலம் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு
பல்லடம்: பல்லடம் அருகே, வழிபாட்டு தலம் கட்டும் பிரச்னையில், கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டப்பட்டது.
பல்லடம் அடுத்த, காளிவேலம்பட்டி கிராமத்தில் கிருஸ்துவ வழிபாட்டு தலம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன் தினம், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன் சுப்பிரமணியம் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தாவிட்டால், மாவட்ட அளவிலான போராட்டம் வெடிக்கும் என எச்சரித்திருந்தார். நேற்று, தாசில்தார் ஜெபஸ்டின் சிவகுமார் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. இன்ஸ்பெக்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். காளிவேலம்பட்டி கிராம மக்கள், வழிபாட்டுத் தல உரிமையாளர்கள் பங்கேற்றனர். இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. குடோன் கட்டுவதாக கூறி அனுமதி பெற்று, கட்டுமான பணி துவங்கிய பின், ஜபக்கூடம் கட்டுவதாக அனுமதி கேட்பதை ஏற்க இயலாது. எனவே, இது குறித்து கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை, கட்டுமான பணிகளை தொடரக்கூடாது என, தாசில்தார் உத்தரவிட்டார்.