நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில் உற்சவம் கோலாகலம்
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது பிரசித்தி பெற்ற நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் உற்சவம் நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு பாரம்பரிய ஆச்சாரமான "பள்ளிவாள் கடயல்" என்ற நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பித்தன. 5க்கு கணபதி ஹோமத்தை தொடர்ந்து வரியோலை வாசிப்பும் நடந்தன. 10 மணிக்கு பழயன்னூர் பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றன. 11 மணிக்கு சோற்றானிக்கரை விஜயன் மாரார் தலைமையிலான குழுவின் பஞ்சவாத்தியம் முழங்க யானைகளின் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தன. தொடர்ந்து 4.30 மணியளவில் கோவில் சன்னிதியில் எட்டும் 11 யானைகள் கலாமண்டலம் சிவதாசன் மாரார் தலைமையிலான குழுவின் செண்டைமேளம் முழங்க கோவில் வளாகம் அருகே அமைத்த பிரம்மாண்ட பந்தல் முன் அணிவகுத்தன. அதேநேரத்தில் உற்சவத்தில் போட்டிபோட்டு பங்கு கொள்ளும் "வலங்கி" பிரிவு மக்களின் சார்பிலான முத்துமணி குடைகளும் ஆடை ஆபரணங்களும் அணிந்த 11 யானைகள் மட்டன்னூர் சங்கரன்குட்டி மாராரின் தலைமையிலான குழுவின் செண்டை மேளம் முழங்க எதிர்நோக்கி அணிவகுத்து நின்று நடந்த இரு தரப்பினர் இடையே போட்டிபோட்டு நடந்த பல வண்ண "குடை மாற்றம்" நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து மாலை இரு தரப்பினர் இடையே பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடைபெற்றன. இன்று (4ம் தேதி) அதிகாலை மூன்று மணி அளவில் நடந்த அதிர வைக்கும் பிரமாண்ட வானவடிக்கையை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். உற்சவத்தையொட்டி போலீஸ் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தனர்.