எமன் பூஜித்த ஈஸ்வரனை தரிசித்த சூரிய பகவான்: பக்தர்கள் பரவசம்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் சன்னதியில் சூரிய பகவான் அதிகாலையில் ஒளியை தந்தார். இதனை பக்தர்கள் மகிழ்வுடன் தரிசித்து சென்றனர்.
எமன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இச்சிறப்பு வாய்ந்த எமன் ஈஸ்வரனை பூஜித்த தலமாக உள்ளதால் எமனேஸ்வரம் என்ற பெயர் பெற்றது. இக்கோயிலில் மூலவர் எமனேஸ்வரமுடையவர் என்ற திருப்பெயரில் அருள் பாலிக்கிறார். இங்கு பொன்னாள் பூண்முலை உமையாள் தனிச் சன்னதியில் உள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திராயன காலத்தில் 18 ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் சூரியன் தன் கதிரை எமனேஸ்வரமுடையவர் சன்னதியில் கதிர்களை பாய்ச்சி அருள்பாலிக்கிறார். இதேபோல் ஆவணி மாதம் தட்சணாயன காலத்தில் 18 முதல் 21 தேதி வரை அருள்பாளிக்கிறார். அப்போது ஒவ்வொரு நாளும் அதிகாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை சூரியக்கதிர்கள் சன்னதியில் விழும் படி உள்ளது. இதனை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசித்து செல்கின்றனர்.