உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டம் மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டம் மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர்: சூளகிரி அருகே நடந்த, தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டத்தை, மூன்று மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, கோபசந்திரத்தில், தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவாரி அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரித்த தேரில், உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சூளகிரி பி.டி.ஓ., விமல்ரவிக்குமார், வெங்கடேஸ்வரா சுவாமி சேவா டிரஸ்ட் தலைவர் நாராயணசாமி, தொழிலதிபர் ராமமூர்த்தி மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய வீதியில் வலம் வந்த தேர், மீண்டும் நிலையை அடைந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேர் முன்பு பூஜை செய்து வழிபட்டனர். இரவு, 9:00 மணிக்கு பிருந்தாவன உற்சவம், தீபாராதனை, 51 பல்லக்கு உற்சவம், ‘குருஷேத்திரம்’ நாடகம் மற்றும் வானவேடிக்கை நடந்தது. விழாவில் இன்று, துவஜாவரோஹனம், சலுவமூர்த்தி உற்சவம், சயனோற்சவம், இரவு, 10:00 மணிக்கு தெலுங்கு நாடகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !