நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்
நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்களில் பங்குனி மாதத்திருத்தேர் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த மார்ச், 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை பல்லாக்கு புறப்பாடு நடந்தது. தினமும் இரவு சுவாமி அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.கடந்த, 4ல், குளக்கரை நாமகிரித்தாயார் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர், நரசிம்மருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 5ல், குதிரை வாகனத்தில் திருவேடு பரிஉற்சவம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு நரசிம்மர் கோவில் திருத்தேர் திருவீதி உலா நடந்தது. எம்.பி.,சின்ராஜ், நகராட்சி சேர்மன் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி உள்ளிட்டோர், திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேரோட்டம் கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில் வழியாக வந்து மீண்டும் நிலையடைந்தது.