உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின் அலங்கார தேரோட்டம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின் அலங்கார தேரோட்டம்

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற மின் அலங்கார தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை, தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா கடந்த 29ம் தேதி இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு 7:15 மணிக்கு மின் அலங்கார தேரோட்ட விழாவிற்காக கோவில் முன்பாக மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு உற்சவர் முத்துமாரியம்மன் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினார்.பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன்,இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க.,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,பிராந்தமங்கலம் வெள்ளைச்சாமி தேவர் குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் போஸ், இளையான்குடி அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கனகராஜா,ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 7:20 மணிக்கு பால்குடமும், மாலை5:50 மணிக்கு ஊஞ்சல் உற்சவம்,இரவு 10:20 மணிக்கு புஷ்ப பல்லாக்கும் நடைபெற உள்ளது.நாளை சனிக்கிழமை இரவு 7:20 மணிக்கு தீர்த்தவாரியுடன் பங்குனி பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !