உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியனார் கோயில் திருமடத்தின் சாவி: திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை

சூரியனார் கோயில் திருமடத்தின் சாவி: திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை

மயிலாடுதுறை: சூரியனார் கோயில் ஆதீன திருமடத்தின் சாவியை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறநிலையத்துறை ஒப்படைத்தது.


சூரியனார் கோவில் ஆதீனம் 14ம் நூற்றாண்டில் சிவாக்கிர யோகியால் (ஆதி சிவாச்சாரியார்) தொடங்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் 28 வது குருமகா சந்நிதானமாக இருந்த மகாலிங்க தேசிக பரமாசாரியார் சுவாமிகள் பெங்களூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட விவகாரத்தால் சலசலப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி அவரை மடத்திலிருந்து வெளியேற கிராம மக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து மகாலிங்க சுவாமி ஆதீனம் நிர்வாக பொறுப்பை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து யாத்திரை செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்றார்.


அறநிலையத்துறை சார்பில் பட்டீஸ்வரம் செயல் அலுவலரை ஆதீனத்தின் நிர்வாக பொறுப்பாளராக நியமித்து ஒரு சிவாச்சாரியார் கொண்டு குரு முதல்வர் சிவாக்கிர யோகிகளுக்கு  தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடந்தது.  இந்நிலையில் மீண்டும் தன்னிடம் சூரியனார் கோவில் ஆதீனம் நிர்வாக பொறுப்பை ஒப்படைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மகாலிங்க சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு  நடந்து வந்தது. ஆதீன மரபு மீறி மகாலிங்க சுவாமி திருமணம் செய்து கொண்டதால் அவர் தொடர்ந்து ஆதீன குருமகா சந்நிதானமாக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர் என்றும், தொடர்ந்து சூரியனார் கோவில் ஆதீனத்தை திருவாவடுதுறை ஆதீனம் வழி வழியாக நிர்வகித்து வருவது குறித்தும் உரிய ஆதாரங்களுடன் கோர்ட்டில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு  நவம்பர் 28ம் தேதி சூரியனார் கோயில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக மகாலிங்க சுவாமி இருக்க தகுதி இழந்துவிட்டார் என்றும், ஆதீனத்தின் சாவியை அறநிலையத்துறை திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானத்திடம் ஒப்படைக்க  உத்தரவிட்டது.  இந்நிலையில் கோர்ட்  உத்தரவிட்டு 45 நாட்கள் மேலாகிய நிலையில் நேற்று இரவு அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உத்தரவுக்கிணங்க பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி சூரியனார் கோவில் ஆதீனம் மடத்தின் சாவியை திருவாடுதுறை ஆதீனம்  தலைமை மடத்தில் ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கினார். தொடர்ந்து சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஒடுக்கம் ஆன்மார்த்த பூஜை அறை குருமகாசந்நிதானம் அறை என சீல் வைக்கப்பட்ட அனைத்து அறைகளையும் அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்மலாதேவி, ஆய்வாளர் அருணா ஆகியோர் முன்னிலையில் திருவாவடுதுறை ஆதீனம் பொது மேலாளர் மணவழகன் மற்றும் ஆதீன பணியாளர்கள் திறந்து அனைத்து அறைகளில் உள்ள பொருட்களையும் சரிபார்த்து பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !